சனி, 20 நவம்பர், 2010

கவிஞர் சரோசா தேவராசு


பொன்றாத் துணையே!
அளவான  சொற்களிலே
      ஆழங்கால்  பட்டறிவும்
    அமைதி கொஞ்சும்
களையான உன்முகத்தில்
   கவிபாடும் புன்சிரிப்பும்
    கரைந்த  தெங்கே?
அலைகடலில்  சிறுதுரும்பாய்
   அலைக்கழிக்க எமைவிட்டே
    அந்தோ நீயும்
நிலையான  உறக்கத்தில்
   நிம்மதியாய்ப்  போனதுவும்
    நீதி தானோ?

நிமிர்ந்தநடை போனதெங்கே?
      நேர்கொண்ட  பார்வைஎங்கே?
         நெஞ்சம் பொங்கத்
தமிழுக்காய் உழைத்தவனே!
   தண்நிலவேசிமோன்என்னும்
    தகையேஅண்ணா!
இமியளவும்  சோராமல்
   இறைத்தொண்டில்  உளம்தோய்ந்தே
         இகத்தில்  வாழ்வை
உமிபோல  உதறிவிட்டே
   உயரத்தில் பறந்ததுமேன்?
    உரைப்பாய் நீயே!

முன்னேர்நீ  சென்றவழி
      முன்னேறப்  பின்வந்தோம்
         முதல்வா நீயும்
கண்ணில்லாக்  குருடர்க்குக்
      கண்தந்து பறித்ததுபோல்
         கலங்க  வைத்தாய்!
என்னேஇக்  கொடுமையென
      எண்ணிஎண்ணி  மாய்கின்றேன் ;
         இறைவன் என்பான்
கண்ணே இல்  லாதவனோ?
      கருணையினை  மறைந்தவனோ?
         காலன் தானோ?

ஆயிரமாய்ப் பூமலரும்!
      அத்தனையும் ஆண்டவனின்
         அடியில்  சேரா
தாயினுக்குப் பிள்ளைஎனத்
      தமிழ்த்தாயின்  திருமகனாய்த்
         தரணி போற்ற
நீயிருந்த நாளெல்லாம்
   நினைவினிலே  மறவாமல்
         நிலைத்தே  நிற்கும்!
வாய்மணக்க  நினதுபுகழ்
      வண்டமிழர்  வாழ்நாளும்
         வளரும் ஓங்கி!

அன்னமென  உனைத்தொடர்ந்த
      அழகுமயில்  தனைவிட்டே
         அகன்று  செல்ல
எண்ணத்தை இரும்பாக்க
      எங்கேநீ  கற்றாயோ?
         ஏங்கும் அந்த
வண்ணமலர்  வாடாமல்
      வரம்தந்துன்  உரம்தந்து
         வழியும் காட்டிப்
பொன்னேபோல்  பொலிந்துயரப்
      போற்றுகிறேன்  உன்னடிகள்
         பொன்றாத் துணையே!


11.11. 2010

0 உங்கள் எண்ணங்கள்: