வியாழன், 2 டிசம்பர், 2010

கவிமணி ச. விசயரத்தினம்

நினைவுமலர்


ஏசுமரி சூசை துணை
எனநம்பிக் காலமெல்லாம்
உறுதியுடன் வாழ்ந்தவர்தான்
செவாலியே சிமோன் யுபர்ட் ஐயா!

ஆன்மீக வாழ்வுதனைப் பெரிதாய் மதித்துயர்ந்த
எம் அன்புத்தோழர் அவர்!
சமூக சேவையெனும் புனிதசேவையை
மதிநுட்பத்துடன் அயராது உழைத்தவர்
செவாலியே சிமோன் யுபர்ட் ஐயா!

பல்கலை பயின்றவர்!
கல்வியில் உயர்ந்தவர்!
ஞானகம் என்ற அமைப்பின் வழியாக
ஞான தீபம் என்ற இதழுக்கு உழைத்தவர்!
அருள்ஞானத் தேனாக நல்நீதி அறிவுரைகள்
அறிஞர்களின் பொன்னுரைகள் தொகுத்தளித்தவர்!

பிரான்சு நாட்டிலே புகழோடு திகழ்கின்ற
கம்பன் கழகம்! கழகத் தலைவர்
கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களுடன்
இணைந்து நின்று தமிழ் வளர்த்த
இன்றமிழ்த் தொண்டர்!

கம்பன் கழகத்தின்
பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்
கழகத்தைக் கண்போலக் காத்தவர்!
தன்இனிய துணைவியார் இராசேசுவரியார்
கம்பன் கழகத்தின் மகளிர் அணிக்குத்
தலைவியாகப் பொறுப்பேற்க வைத்துக்
கம்பன் கழகம் உயர்ந்தோங்க உழைத்தவர்!

ஐயாவின் அறிவாற்றல், கல்வித் தகைமை
கண்டறிந்த பிரான்சு அரசு
இராணுவக் கட்டமைப்பில் தலைமைப் பதவி
அளித்துச் சிறப்பித்தது!
அவரின் தீரத்தை, அன்பை,
நட்பை, பண்பாட்டை,
செயல் திறனைக் கண்டு
பிரான்சு அரசு
செவாலியே என்றும்
புகழுக்குரிய விருதினை வழங்கியது!

ஐயா அவர்களின்
உயர்ந்த தோற்றம்! எழில்மிகு ஏற்றம்!
பண்பில் சிறந்து! பணிவை அணிந்து
புன்சிரிப்பு தவழும் இன்முகத்தர்!
அன்புடன் பழகும் பண்பாளர்!

கம்பன் கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு
கம்பன் விழாவில்
நெடிது நின்று, மிக அமைதியாகப்
பொருள் நிறைந்த
வரவேற்புரை வழங்கி
மன்றத்ததை மகிழவைத்தார்!

அன்றெம்மை
வியசரத்தின ஐயா வாருங்கள்
என்றழைத்து அவர் பக்கத்திலேயே
முன் இருக்கையில் அமர வைத்து
உரையாடிய நிகழ்வினை மறக்கப்போமோ!

அந்த நினைவலைகள் எழும்பொழுதெல்லாம்
எம்முன் நிற்பதுபோல் தெரியுதிங்கே!

என்செய்வோம்
நல்லாரை இழந்துவிட்டோம்!
அவர்தம் மறைவு
அவருடைய குடும்பத்தார்க்கு மட்டுமன்று
தமிழ் உலகுக்கும், கம்பன் கழகத்திற்குப்
பேரிழப்பாகும்!

அன்னாரின் ஆன்மா நல்லமைதி பெற்று
ஆண்டவன் திருவடியில் திளைக்க வேண்டுவோம்!



0 உங்கள் எண்ணங்கள்: