சனி, 11 டிசம்பர், 2010

கலைமாமணி கவிஞர் தே. சனார்த்தனன்

செயலாளர் சிமோன்உய்பேர்

இனிதாய்ப் பேசும் இயல்புடையார்!
    இன்பத் தமிழில் சுவையுடையார்!
கனிவாய்ப் பலரைக் கவர்ந்திடுவார்!
    காணும் உருவில் உயர்ந்திடுவார்!
பணிவாம் நல்ல பண்புடையார்!
    பழகப் பழக அன்புடையார்!
மணியாம் மாந்தர் சிமோன்உய்பேர்
    மறைந்தார் மனமும் வெகுதய்யோ!

காரைக் காலில் பிறந்தவராம்!
    கருணை யுள்ளம் நிறைந்தவராம்!
பாரோர் போற்றும் கர்த்தரையே
    பணிந்து பணிந்து தொழுபவராம்!
தீராப் பகையாம் தீண்டாமை
    வேரோ(டு) அழித்து நின்றவராம்!
சீரோ(டு) இருந்த சிமோன்உய்பேர்
    சென்றார் நெஞ்சம் வெகுதய்யோ!

கொம்பாய்த் திகழ்ந்தே எளியோரின்
    குறைகள் களைந்த அருளாளர்!
கம்பன் கழகச் செயலாளர்!
    இராசேச் வரியின் கண்ணாளர்!
வெம்பி வெம்பி அழுதிடவே
    விரைவாய் விட்டுப் பிரிந்தாரே!
நம்மின் நண்பர் சிமோன்உய்பேர்
    ஞான முகத்தைக் காண்போமோ?

கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
துணைத்தலைவர்: புதுவைத் தமிழ்ச் சங்கம்

0 உங்கள் எண்ணங்கள்: