வியாழன், 2 டிசம்பர், 2010

திருமதி லூசியா லெபோ

எண்ணச் சிதறல்கள்

    சிமோன் ஐயா உயர்ந்தவர். அவரைப் பார்த்தவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். நல்ல உயரமான உடல்வாகு, அளவான பேச்சு, கண்டிப்பான போக்கு -  பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றிச் செவாலியர் என்ற உயர் சிறப்பைப் பெற்றவராயிற்றே.  பேசி, பழகி அவருடன் நெருக்கமானவர்கள் அவரின் இந்த உருவ தோற்றத்துடன் அவரைப் பற்றிய விமரிசனத்தை நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். காரணம் நாங்கள் பார்க்கும் ஐயா உள்ளத்தால், சொல்லால், செயல்களால், உழைப்பால், கருத்தால்,  கரிசனையால், உயர்ந்து நின்று எங்கள் மனத்தில் மறக்க முடியாத ஒரு சிற்பத்தை வடித்து என்றும் எங்களுடன் நிலைத்து நிற்பவர் என்று சொன்னால் மிகையாகாது.

அன்று இயேசுகிருத்து பாரச் சிலுவையைச் சுமந்து கல்வாரி மலை நோக்கிப் பயணிக்கிறார். சிலுவையின் பாரத்தால் கீழே விழுந்துவிடுகிறார். அப்போது அவருக்கு உதவி செய்வதற்காக அவ்வழியே சென்ற சிரேனே ஊரானாகிய சிமோன் முன் வருகிறார். அவருடைய நாமம் தரித்த எங்கள் சிமோன் ஐயாவின் மரணத் தருவாயில் அந்தக் கிருத்து வந்து அவரை விடுவிக்கவில்லையே என்பது என்னுடைய ஆதங்கம். இந்தக் கேள்வியை ஐயாவிடமே  கேட்டிருந்தால் அதற்கு அவர் பதில் என்னவாக இருக்கும் என்றொரு கற்பனை:

    யூதர் வழக்கப்படி குழந்தை இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க அவருடைய பெற்றோர் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது தேவ ஏவதலால் அங்கே வருகிறார் நீதிமானும் ஞானியுமாகிய சிமோன் அவர்கள்.  குழந்தையை வாங்கி ஆரத் தழுவித் தன் கைகளில் ஏந்தி 'உம் மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன இனி அடியேனை உம்மிடம் அழைத்துக் கொள்ளும்"; என்று மன்றாடுகிறார். அந்தச் சிமோனைப் போலத்தான் நம் ஐயா அவர்களும் இறைவனில் ஆனந்தம் கொள்ள மரணத்தைத் தழுவிக் கொண்டார் போலும். என் கேள்விக்கு இதுவே அவர் அளிக்கும் பதிலாக இருக்கும்@ அவருடைய புன்முறுவலும் வாடாத முகமும் எனக்கு இதைத்தான் உணர்த்தியது.

    கம்பன் கழகத்தைச் சார்ந்தவர்கள் 16 பேர் சுவிஸ்நாட்டில் நடந்த திருவள்ளவர் விழாவில் பங்கேற்கப் புறப்பட்டோம். பெண்கள் ஒரு ஊர்தியிலும் ஆண்கள் மற்றொரு  ஊர்தியிலும் பிரான்சிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். பயணம் மகிழ்ச்சியாகவும் படு சாலியாகவும் இருந்தது. விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பாகச் சுவிசு எல்லையில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்க்க வேண்டுமென்று திட்டமிட்டு எங்களை அங்கே வழி நடத்திச் சென்றவர் சிமோன் ஐயா அவர்கள். மிகக் குறைவான உயரத்திலிருந்து நீர் விழுந்து கொண்டிருந்தது. இயற்கையன்னை தந்த அந்த அழகொளிரும் சூழலைப் பார்த்து மகிழ்ந்து நின்றோம். இதைக் கண்ட ஐயா அவர்கள் 'இங்கேயே நின்றுவிட்டால் எப்படி? சிறிது கீழே இறங்கிப் போய் அங்குள்ள குகையிலிருந்து பாருங்கள்!" என்றார். நாங்களும் சென்றோம் 'வாவ்" எனக் களிப்பில் சப்தமிட்டோம். எங்கள் முதுகு  பக்கத்திலேயே அந்த நீர் கொட்டிக்கொண்டிருந்தது. அனைவருமே எங்கள் இளமைப் பருவத்துக்குத் திரும்பி டூயட் பாடாத குறைதான். அவரவர் கேமராக்களில் அவற்றைக் கிளிக் செய்துகொண்டோம். சென்ற முறை இவர்கள் சுவிசு பயணத்தின்போது பார்த்து மகிழ்ந்த அந்த இடத்தை நாங்களும் கண்டு களிக்க வேண்டுமென்ற 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையயகம்" என அவர் விரும்பினார். இளகிய அவருடைய மனத்தையும் எங்கள் மீது அவர்கொண்ட கரிசனத்தையும் இந்நிகழ்ச்சி எனக்கு வெளிப்படுத்தியது.

    அவருடைய புன்முறுவல் என்றும் எனக்கு, நமக்குப் புரியாத ஒரு புதிர்.

    எங்களுடன் இவ்வுலகில் அவர் இல்லாவிட்டாலும் விண்ணிலிருந்தபடியே அவர் இல்லத்து நிகழ்வுகளையும் எங்கள் கழகத்துச் செயல்பாடுகளையும் நிறைவாக வழிநடத்திச் செல்வார் என்பதில் ஐயமில்லை. அவரின் ஆன்மா முடிவில்லா ஒளியில் ஒளிர்வதாக.

(இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால், என் மனப் பாரம், பிரிவுத் துயர்  சற்றே குறைவதாக உணர்கிறேன்.)

0 உங்கள் எண்ணங்கள்: