வியாழன், 2 டிசம்பர், 2010

திருமதி தம்பி தனசெல்வி

இலக்கணமாய் வாழ்ந்தீர்!

இயேசு பிரான் கல்வாரி மலையில் சிலுவைப் பயணத்தில், சிலுவையின் பாரச்சுமை தாங்காது துயருற்றபோது, சுமையைக் குறைக்க, சிலுவையைச் சுமக்க முன்வந்த சிமோனின் பெயரைச் சூடிய பெருந்தகையே! எங்கள் சிமோனே! உலகின் பாரச்சுமை தாங்காது இளைப்பாறத் விரைவில் மேலுலகம் சென்றீரோ!

வரலாற்றுப் பெருமை மிக்க காரைக்காலில் 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் ஆரோக்கியசாமி, குழந்தையம்மாள் இணையருக்கு 5 ஆம் குழந்தையாகப் பிறந்தவரே! நீவீர் பிறந்தது ஏப்ரல் 11ஆம் நாள்! மறைந்தது நவம்பர் 11ஆம் நாள்! மலர்ந்ததும் மறைந்ததும் ஒரே தேதியா! முதல் உலகப் பேரில் உயிரளித்த பிரஞ்சு இராணுவ வீரர்களின் நினைவு நாளன்று நீவீர் அவர்களுடன் இணைந்தீரோ!

சாலக் கல்வி பயின்று, புதுவையில் ஆசிரியர் பணியில் சேர்ந்து, பின்னர் 1964 ஆம் ஆண்டு பிரஞ்சு இராணுவத்தில் சேர்ந்து, படிபடியாக உயர்ந்து, இராணுவத்தில் Sergent என்னும் பதவியைப் பெற்று Adjudant, Adjudant chef, Major என பெரும்பதவிகளைப் பெற்று, பிரஞ்சு இராணுவத்தில் Major Simon Chevalier Simon ஆக உயர்வடைந்தீர்!

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மொழிக்கிணங்க, சிமோன் ஐயா! இராணுவப் பணியில் ஓய்வு பெற்ற பின்னும், கிறித்துவ ஞானகப் அமைப்பிலும், தமிழ்ப்பணி ஆற்றும் கம்பன் கழகத்திலும் பொதுச்செயலாளர் பொறுப்பெற்றுத் தொண்டாற்றினீர்!

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, புன்சிரிப்பு! பொறுத்தாற்றும் தன்மை, பொறுமை, அமைதி, நற்பண்புகள் அனைத்தும் கொண்டு திகழ்ந்தீர்!

ஈந்து புறந்தந்து, இனியன எல்லாம் தந்து, சிறந்த பண்பூட்டி, பக்திநெறி காட்டி இருகண்மணிகளாம் ஆனந்த், வசந்தி என்ற பிள்ளைகளை உருவாக்கி வழிநடத்தினீர்! தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்தீர்!

சுமை சுமர்ந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் ஆண்டவர் அழைக்கின்றார்!
இளைப்பாற்றிக் கொடுக்கின்றார்!
என்னும் சொற்களுக்கிணங்கி இளைப்பாறச் சென்றீரோ?

நிலையில்லா உலகம் என்றெண்ணி
நிலையான புகழ்தேடி விண்ணுலகம் சென்றீரோ?
நீயே நிரந்தரம் என இறைவனைச் சேர்ந்தீரோ!
உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்!

0 உங்கள் எண்ணங்கள்: