ஞாயிறு, 21 நவம்பர், 2010

கவிஞர் அருணாசெல்வம்

விரைவாகச் சென்றதுமேன்?

விரைவாகச் சென்றதுமேன்? விண்ணுலகம் என்று
மறைவாக உண்டெனக் காட்ட - மறைந்து
நிறைவாகச் சென்றாயோ! நீர்குமிழ் வாழ்வைக்
குறையாக்கிச் சென்றாய்! கொடிது!


கொடிதெனும் வாழ்வைக் குடிகள், மிகவும்
நெடிதென்றே எண்ணாமல் நெஞ்சம் - துடிக்கும்
நொடியெல்லாம் நன்மையாய் வாழ்ந்ததைக் காட்டிக்
கடிதாகப் போனாய் கடந்து!
கடந்த தடங்களைக் காவியமாய்ச் செய்து
நடந்து திடமாகப் போனாய்! – சுடராய்ப்
படர்ந்து ஒளிவீசும் பண்பை நினைந்து
தொடர்ந்து பெருகும் துயர்!

துயர்கொண்ட வாழ்வு! துணையை இழந்த
பயங்கொண்ட நன்மனையாள்! பண்பால் - உயர்ந்த
மனங்கொண்ட நன்மக்கள் உள்ளம் அழுது
கனங்கொண்ட வன்சுமையைக் காண்!

பொன்னகை வாங்கிப் பொலிவுடன் போடாமல்
வன்னகை வாய்திறந்து பேசாமல் - மின்னிடும்
புன்னகை பூமுகத்திற் போதுமென்று கண்மூடி
விண்ணுலகைத் தொட்டாய் விரைந்து!


12.11.2010

0 உங்கள் எண்ணங்கள்: